புது வண்டி - படித்ததில் பிடித்தது.
படித்ததில் பிடித்த கதை
டீக்கடை வாசலில் புதிய ஸ்கூட்டரில் வந்திறங்கிய நடராசு ஸ்கூட்டரை நிறுத்தியும் நிறுத்தாமலும் "ரமேசு ஒரு டீ" என குரல் குடுத்தான்.
"நீ மொதல்ல உள்ள வா. அப்புறம் டீ சொல்லு," என மறுகுரல் உள்ளிருந்து வந்தது. வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு உள்ளே சென்றவன், "டேய் பாஸ்கரு எப்படா பெங்களுருல இருந்து வந்த, அதும் பொதங்கிழமை அன்னிக்கி உன்ன பாக்கறதுக்கே அதிசியமா இருக்கு டா."
"இன்னைக்கு காலைல தான்டா வந்தோம். பசங்களுக்கு சம்மர் ஹாலிடே. அதுமில்லாம நம்ம மாரியம்மன் கோயில் வேற சாட்டியிருக்காங்க இல்ல. அதான் நாலு நாள் லீவு போட்டுட்டு வந்துட்டேன். எப்படியும் நீ இங்க வருவேன்னு தெரியும். அதான் வீட்டுக்கு வந்ததும் நேரா இங்க வந்துட்டேன்."
"ரமேசு ரெண்டு டீயா போடு"
"உக்காரு ராசு," என எதிரிலிருந்த பெஞ்சை காட்டினான்.
அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த பாஸ்கர் எதையோ எண்ணி சிரித்தான்.
"என்ன பாஸு, ஏஞ்சிரிக்கிற?"
"இல்லடா நீ உள்ள வரும்போது வேட்டிய மடிச்சு கட்டிட்டு வந்த இல்ல, அத பார்த்தது பழசெல்லாம் ஞாபகம் வந்துச்சா அதாஞ் சிரிச்சேன். நீயும் நானும் திருட்டுத்தனமா வாத்தியாரு தோட்டத்துல புகுந்து எளனி வெட்டி குடிச்சுட்டு முழு வாழத்தார வெட்டி எடுத்துட்டு வரும்போது உங்கையா கிட்ட மாட்டி ரெண்டுபேரும் பெல்ட்ல அடிவாங்குனோமே அது ஞாபகம் வந்துச்சா. அதான்."
"அத ஏன்டா இப்ப ஞாபக படுத்தற பாஸு."
"அப்புறம்...., ராசு வண்டி புதுசா இருக்கு. இன்னைக்குதா எடுத்த போல."
"அஆம்டா. இப்பதா கடையிலிருந்து எடுத்துட்டு நேரா நம்ம முக்கூட்டு புள்ளாரு கோயில்ல பூஜைய போட்டு வர்றேன்."
கடையிலிருந்து வெளியே எட்டிப்பார்த்த நடராசுக்கு கருக்கென்றது. அவனின் புதிய ஸ்கூட்டரின் அருகில் ஒருவன் வெகுநேரமாக அதனையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தான். நடராசு அவனை பார்த்து முறைப்பதை உணர்ந்த அவன் அவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சில் வந்தமர்ந்தான். வந்தமர்ந்தவனை மேலிருந்து கீழாக நோக்கிய நடராசுவுக்கு அவன் அணிந்திருந்த ஜீன்சும் டீ ஷர்ட்டும் அவன் அந்த பகுதியை சேர்ந்தவனில்லை என்பதை தெளிவாக காட்டியது.
"ஏம்பா, அங்கதா அம்புட்டு எடமிருக்குல்ல. அந்தல்ல போய் உக்காரு போ," என அவனை துரத்தினான் நடராசு.
நடராசை முறைத்துக்கொண்டே அடுத்த பெஞ்சில் அமர்ந்தவன் தன் கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்தான் அவன்.
"அப்புறன்டா, என்ன சொல்லிட்டு இருந்த நானு. எல்லா இவனால வந்துச்சு, கெரகம்புடுச்சவ எங்குருந்து வந்து சேந்தானோ. நம்ம தாமரை பிளஸ்டூல நல்ல மார்க்கு வாங்குனா வண்டி வாங்கித்தரேன்னு சொல்லி இருந்தேன். அந்த புள்ளையும் சொன்னமாதிரி நம்ம சுத்துவட்டார ஸ்கூலுல மொத மார்க்கு வாங்கிடுச்சு. அதா அதுக்கே தெரியாம போய் வாங்கிட்டு வந்துட்டேன். அட நம்ம அம்மிணிக்கு கூட தெரியாது. அதுக்கு தெரிஞ்சா கன்னாபின்னான்னு திட்டும்."
"சுப்பர் ராசு. அதென்னடா பர்பிள் கலர்ல வண்டி."
"தாமரைக்கு அந்த கலர்தா புடிக்கும்போ."
"எத்தனையாச்சு? உன்ற பழய வண்டி?"
"அதாயிடுச்சு எம்பது, எக்ஸ்ரா பிட்டிங் எல்லாஞ்சேத்தி. பக்கத்துல வேட்டையாம்புதூர் கார்த்தி இருக்கானில்ல அவங்கிட்டதான் எடுத்தேன். பழைய வண்டிய பத்துக்கு எடுத்துகிறேன்னான் சரின்னுட்டு குடுத்துட்டேன். மீதிக்கு மஞ்சளு வித்த காசு இருந்துச்சு. அதையுங் குடுத்து எடுத்துட்டேன். என்ன அந்த வண்டிய குடுக்கிறதுக்கு தான் மனசே இல்ல. ஆனா புள்ளையொட ஆசதானப்பா இப்ப நமக்கு முக்கியொ. உனக்குதா தெரியுமே, எங்கையா, அவரு போட்டு வெச்சிருந்த LIC காசிலதான அந்த வண்டிய வாங்கி குடுத்தார்ன்னு. அட அதையு நானு நீயுந்தான போய் வாங்கிட்டு வந்தோம். பதனஞ்சு வருசமாசில்ல, மறந்துருப்ப. இந்த வண்டி புதுசா வேற இருக்குதா. வண்டிகிட்ட எவ வந்தாலும் திருட்டு பயலாதான் தெரியறான்."
"அதா அவன, வந்துன்ன எகுறுணியாக்கும்?"
"அதுக்கில்ல பாஸு. பாரு கோயில்லருந்து வெளிய வர்றேன் ஒரு பொடிபய வண்டில வெளண்ட்டு இருந்தான். தொரத்தி உட்டுட்டு வண்டி எடுத்துட்டு வந்து லாலா கடைல சுவீட்டு வாங்கிட்டு திரும்பறேன் மறுபடியும் அவனே வீல சுத்திட்டு இருக்கான். இவனுக வெளாடறதுக்கு நம்ம வண்டி தான் கெடச்சுதா என்ன. அதான் தலைல ரெண்டு தட்டு தட்டிடு வண்டிய தூக்கிட்டு வந்துட்டேன்"
"சார், சார்....."
"ராசு, அவரு உன்னத்தான் கூப்புட்ராறுன்னு நெனைக்கிறேன்."
திரும்பியவன் அங்கு நின்று கொண்டிருந்த புதியவனை கண்டு திகைத்தான். நேர்த்தியாக சீவப்பட்ட தலை, அடர்ந்த கருப்புநிற பேண்டினுள் இன் செய்யப்பட்டிருந்த வெளிர் நீலநிற சட்டை, சுத்தமாக பாலிஷ் செய்யப்பட்ட கருப்பு நிற சூ, கையில் லாலா கடை ஸ்வீட் பாக்கெட்.
நீலச்சட்டை ராசுவிடம், "சார் வண்டி சாவிய குடுங்க சார்."
ராசு அவனிடம், "ஆரு நீங்க. எதுக்கு யேவண்டி சாவிய கேக்குறீங்க, கார்த்தி கடையில இருந்து வரீங்களா?"
"சார் என்ன விளையாடுறீங்களா? வண்டிய ஒட்டி பார்த்துட்டு தர்றேன்னு வாங்கிட்டு வந்தீங்க. தந்த பாவத்துக்கு உங்க வண்டீன்னு சொந்தங் கொண்டாடுறீங்களே?"
ராசுவுக்கு திக்கென்றது.
பாஸ்கர் சூழ்நிலை ஏதோ விபரீதமாக செல்வதை புரிந்து கொண்டான். அவன் நீலச்சட்டையிடம், "சார் ஒரு நிமிஷம். நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல. ராசு இப்பதான் புதுசா வண்டி வாங்கிட்டு வந்து நிறுத்தறான், நீங்க திடீர்ன்னு வந்து உங்க வண்டீன்னு சொல்றீங்க. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க."
"என்னது இது அவுரோட வண்டின்னு சொன்னாரா? இது என் வண்டிங்க. நேத்துதான் நான் வாங்கினேன். இப்ப கொஞ்ச முன்னாடி லாலா ஸ்வீட்ல ஸ்வீட் வாங்கிட்டு இருந்தேன், பக்கத்துல இவுரும் ஸ்வீட் வாங்கிட்டு இருந்தாரு. நான் வண்டிய ஸ்டார்ட் பண்ணும்போது இவரு வந்து வண்டி புதுசுங்களா, நானும் இந்த மாதிரி ஒரு வண்டிய வாங்கணும். வண்டி விலை எவ்வளவுன்னு கேட்டாருங்க. நானும் எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாஞ்சேத்தி எம்பதாச்சுன்னு சொன்னேன். அதெனங்க பர்பிள் கலர்ல வண்டி இருக்குன்னு கேட்டாருங்க. நானும் ஆமாங்க, என் வொய்ஃப்க்கு புடுச்ச கலருன்னு சொன்னேன். அதுக்கு இவுரு இவுரோட பொண்ணு, பேரென்னவோ சொன்னாரே, ரோஜாவா... இல்ல தாமரை, அது ப்ளஸ்டூ படிக்குது. அதுக்கும் இதே கலரு தான் பிடிக்கும். அதுக்கு ஒரு வண்டி வாங்கணும், நான் ஒரு ரவுண்டு ஒட்டி பாக்கட்டுமான்னு கேட்டாரு. ஆளு நல்ல மாதிரி தெரிஞ்சங்காட்டி நானும் எதார்த்தமா வண்டிய கொடுத்துட்டேன். இப்ப இங்க வந்து இவுரோட வண்டீன்னு சொல்லறாரு."
ராசுவிடம் திரும்பியவன், "சார் வொய்ஃப்க்காக லோன் போட்டு வாங்கியிருக்கேன். சாவிய குடுங்க சார்."
வண்டி சாவியை இறுக்கமாக பிடித்துக்கொண்ட ராசு நீலச்சட்டையிடம் குரலை உயர்த்தி, "ஆருடா நீ, ஆரு வண்டிய ஆரு சொந்தங் கொண்டாடறது? எந்த ஊருடா நீ?" என கூறி அடிக்கச்சென்றான். அதற்குள் சுற்றிலும் டீ குடித்துக்கொண்டிருந்தவர்கள் அவர்களை சூழ ஆரம்பித்தனர். அவர்களில் இருவர் ராசுவை தடுத்து பிடித்துக்கொண்டு, "ராசன்னா இருன்னா என்னன்னு விசாரிக்கலாம்."
நீலச்சட்டையிடம், "உன்ன இதுக்கு முன்னாடி இந்த சின்னப் பாளையத்துல பாத்ததில்லையே, யாரு நீ? எங்கிருந்து வர்ற?"
"சார், நான் இங்க பக்கத்துல இருக்கிற வேட்டையாம்புதூர் தாண்டி முத்தன்னம்பாளையத்துல குடியிருக்கிறேங்க. அங்க இருக்கிற ராபின்சன் ஃபாப்ரிக்ஸ்ல மேனேஜரா இருக்கிறேன். நேத்து சாயந்திரம் தான் இந்த வண்டிய நான் வாங்கினேன். வேட்டையாம்புதூர் ஈசுவரன் கோயில்லதான் பூஜையும் போட்டேன். இப்ப அடுத்து இருக்கிற பெரிய பாளையத்துல இருக்கிற என் மாமியார் வீட்டுக்கு போய்ட்டு இருக்கிறேன். சார், டைம் ஆச்சு. வண்டி சாவிய வாங்கி குடுங்க பளீஸ். நான் போகணும், அங்க எல்லாரும் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க, ப்ளீஸ்."
கிட்டத்தட்ட அவன் அழுது விடுவான் போலிருந்தது.
பாஸ்கர் நடராசுவை பார்த்தான். அவன் முகம் பேயறைந்ததை போலிருந்தது. "ராசு என்ன இது? இவரு என்னென்னமோ சொல்றாரு."
"பாஸு.. இவன் ஆருன்னே தெரியாது. இதுக்கு முன்னாடி இவன நான் பார்த்ததே இல்ல." அவன் குரலில் தடுமாற்றம் தெரிந்தது.
அருகில் நின்றிருந்த ஜீன்ஸ் பேண்ட் பாஸ்கரிடம் நீலச்சட்டையை காட்டி சார், "இவரும் இவரோட வொய்ஃப்ம் நேத்து சாயந்திரம் ஈஸ்வரன் கோயில்ல இந்த வண்டிக்கு பூஜை போட்டுட்டு இருந்தாங்க. நானும் அங்க தான் இருந்தேன். நானே பார்த்தேன்." நீலச்சட்டையிடம் திரும்பிய அவன், "சார் நேத்து நீங்க பூஜை போடும்போது மொபைல்ல போட்டோ எடுத்தீங்களே அதை காமீங்க சார். அதை விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க."
ராசு அவனை நோக்கி கத்தினான், "டேய் உன்ன திட்டினேன்னு அவனுக்கு நீ சப்போர்ட் பண்றியா?"
அதற்குள் நீலச்சட்டை தன் மொபைலிலிருந்த போட்டோவை எல்லாம் பாஸ்கரிடம் காண்பிக்க ஆரம்பித்தான். போட்டோவில் அதே பர்பிள் கலர் ஸ்கூட்டர், அவனும் அவன் வொய்ஃப்ம் நின்று கொண்டிருந்தனர். போட்டோவில் அவர்கள் பின்புலத்தில் வேட்டையாம்புதூர் ஈஸ்வரன் கோயில் இருந்தது. அதிலிருந்த போட்டோ ஒன்றில் வண்டியின் ஸ்பீடோ மீட்டரும் இருந்தது. அதில் பதினைந்து கிலோமீட்டர்கள் ஓடியிருந்ததை காட்டியது.
உடனே நீலச்சட்டை, "சார் இங்க பாருங்க நேத்து வாங்கும்போது பதினைந்து கிலோமீட்டர்கள் ஓடியிருக்கு. இப்ப பார்தீங்கன்ன ஒரு நாப்பது கிலோமீட்டர் காமிக்கும். வேன்னா செக் பண்ணி பாருங்க."
வெளியே ஓடிய ஒருவன் வண்டியிலிருந்த ஸ்பீடோ மீட்டரை பார்த்தவன், "ஆமாங்க. இதுல முப்பத்தேழு காமிக்குதுங்க," என கத்தினான்.
நீலச்சட்டை பாஸ்கரிடம், "சார், உங்கள பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுது. நீங்களே மொபைல்ல செக் பண்ணி பாருங்க அந்த போட்டோ எல்லாம் நேத்து டேட்ல இருக்கும்." அதையும் பார்த்த பாஸ்கர் ராசுவிடம், "என்ன ராசு இது?"
"டேய் என்ன என்னையவே சந்தேகபடுறியா? நீ வேணா கார்த்தி கிட்ட கேளு அவன் சொல்லுவான்."
அதற்குள் ஜீன்ஸ் பேண்ட், "இதோ கார்த்தியன்ன நெம்பர் என்கிட்டவே இருக்கு, நானே கூப்பிடுறேன்."
"ன்னா, நேத்து யாரவது உங்க கடைல ஸ்கூட்டர் வாங்குனாங்களா?"
"ஆமாம்பா. நம்ம ராபின்சன் ஃபாப்ரிக்ஸ் மேனேஜரு ஒரு ஸ்கூட்டர் எடுத்தார், பர்பிள் கலர் ஸ்கூட்டர். நான் இப்ப கோயில்ல இருக்கேன் அப்புறமா கூப்பிடட்டுமா," கட் செய்தான் கார்த்தி.
அந்த கூட்டத்திலிருந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர், "என்ன நடராசு நீ வண்டி வாங்குனது நெசந்தானா?"
"ஐயா என்னங்கையா நீங்களே எம்மேல சந்தேகபடுரீங்களா," நடராசுவின் கண்களில் கண்ணீர் தேங்கியது. கிட்டத்தட்ட அழுதே விட்டான். எல்லோரின் பார்வையிலும் தன்மீது சந்தேகம் இருப்பதை உணர்ந்தான்.
"அட அதுக்கில்ல ராசு. உங்கையா, உங்காப்பாரு ஏன் உங்க பரம்பரையவே நல்லா தெரியும். ஆனா இப்ப சாட்சி சந்தர்ப்பமெல்லாம் உனக்கு எதிராவில்ல இருக்கு."
"டேய் தம்பி, டெம்போல இருக்கிற பூ மூட்டையெல்லாம் எடுத்து உள்ள வையி. ஒரு டீ சாப்புட்டு வர்றேன்."
வெளியே பஞ்சாயத்து தலைவர் சாமிகண்ணுவின் குரல் கேட்டது. பஞ்சாயத்து தலைவராக இருந்த போதிலும் தன் சொந்த தொழிலான பூ வியாபாரத்தை கைவிடாமல் நடத்திக்கொண்டிருப்பவர் சாமிகண்ணு.
உள்ளே நுழைந்தவர் அங்கே இருந்த கும்பலை பார்த்து, "என்னங்கடா இங்க இம்புட்டு சத்தமா இருக்கு. அதுவும் ராசுவ சுத்தி கும்பலா நிக்கிறீங்க. ராசு எதாவது ஒடம்புகிடம்பு சரியில்லையா கண்ணு?.... பாஸ்கரு நீ எப்ப கண்ணு வந்த ஊர்லிருந்து?"
"இதோ தலைவரே வந்தாச்சு அவுரு கரைட்ட சொல்லுவாரு." கும்பல் தலைவரை நோக்கி திரும்பியது.
"தலைவரே நம்ம ராசு ஒரு வண்டி வாங்கிட்டு வந்துச்சு."
"இல்லைங்க தலைவரே இவருதுதான் அந்த வண்டி."
"தலைவரே..."
"அட நிறுத்துங்கப்பா. ஆளாளுக்கு ஆளாளுவிதமா சத்தம்போட்டுட்டு. யாரோ ஒருத்தர் சொல்லுங்கப்பா. தமிழையா நீங்க சொல்லுங்க என்ன நடந்துச்சுன்னு."
தமிழாசிரியர் அங்கு நடந்தவற்றை எல்லாம் விவரித்தார்.
சாமிகண்ணு கும்பலை பார்த்து, "என்னங்கடா யாரோ ஒருத்தன் ஏதோ சொன்னான்னு நம்ம பையன சந்தேகபடுரீங்களா."
நீலச்சட்டையை நோக்கி, "நீ ஏதோ போட்டோவெல்லாம் வெச்சுருகியாமா, எங்க காமி நானுங் கொஞ்சம் பாக்கட்டும்."
நீலச்சட்டை தயங்கினான். "போன் அவுருகிட்ட இருக்கு." பாஸ்கரை கட்டினான்.
பாஸ்கரும் போனிலிருந்த போட்டோக்களை எல்லாம் ஒவ்வொன்றாக சாமிகண்ணுவிடம் கட்டினான். தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்த சாமிகண்ணு, "ஒரு நிமிஷம் நிறுத்து கண்ணு. இதுக்கு முன்னத்த போட்டோவ காமி."
அந்த போட்டோவை மீண்டும் மீண்டும் பார்த்தவர் கூட்டத்தை நோக்கி, "டேய் நகருங்கடா" என கூறி வெளியிலிருந்த ஸ்கூட்டரை பார்த்தார். பின் நீலச்சட்டையை நோக்கி,
"ஏன்டா இந்த வண்டிய எப்ப வாங்கினேன்னு சொன்ன?"
"நேத்துங்க தலைவரே," என்றான் நீலச்சட்டை.
"அப்போ இது உன்னோட வண்டின்னு அடிச்சு சொல்ற?"
"ஆமாங்க...... எத்தன தடவ கேப்பிங்க?" பதிலில் எரிச்சல் அதிகமாக இருந்தது.
அவன் சொல்லி வாய் மூடுவதற்கும் சாமிகண்ணுவின் கை அவன் முகத்தில் பதிவதற்கும் சரியாக இருந்தது. "களவாணி நாயே, ஆரு ஊர்ல ஆரு கிட்ட வந்து களவாணித்தனம் பண்ற."
அதே நேரத்தில் ஜீன்ஸ் பேண்ட் வெளியே ஓட எத்தனிக்கவும் சாமிகண்ணு கும்பலை நோக்கி, "அந்த நாயையும் புடிங்கடா. அவனும் கூட்டு களவாணியாத்தான் இருக்கோணு." மேலும் நீலச்சட்டையின் முகத்தில் இரண்டு அறை வைத்தவர், "உண்மைய சொல்லுங்கடா நாய்களா," என கத்தினார்.
சரியாக அதே நேரத்தில் உள்ளே நுழைந்த ஏட்டு ஏகாம்பரம், அவர் சார்பாக அவனை இரண்டு அறை விட்டவர், "அப்பப்ப மொபைள்ள செல்ஃபிய எடுத்து வெச்சு திட்டம் போட்டு ரிஜிஸ்டிரேசனே பண்ணாத புது வண்டிகளா பாத்து, அதை வாங்குனவன் கண்ணு முன்னாடியே திருடற கும்பல் ஒன்னு புதுசா கிளம்பி இருக்குனு இன்னைக்கு காலைலதான்டா உங்கள பத்தி ஸ்டேசனுக்கு இன்பார்மேசன் வந்துச்சு. அதுக்குள்ளே இங்கயே உங்க கைவரிசையை காமிச்சிட்டிங்களே. உள்ள வெச்சு முட்டிக்கு முட்டி தட்டுனா எல்லாம் சரியா இருக்கும், வாங்டா."
"ஏம்பா இவனுக கையை கட்டி ஸ்டேசன் வரைக்கும் இழுத்துட்டு வர முடியுமா," அங்கிருந்த இரு இளவட்டங்களை பார்த்து கேட்ட ஏட்டு, "தலைவரே, நீங்க கவலைபடவேண்டாம், இத நான் பார்த்துக்கிறேன்," என கூறி அவர்கள் இருவரையும் இழுத்துச்சென்றார் ஏட்டு.
அங்கிருந்த கூட்டத்தை பார்த்த சாமிகண்ணு, "ஏம்பா அதான் எல்லா பிரச்சனயும் முடிஞ்சுதில்ல, போய் அவனவன் பொழப்ப பாருங்க போங்க. ரமேசு ஒரு டீ போடு."
நடராசுவுக்கு அப்பாடா என்றிருந்தது. "கஸ்ட்டப்பட்டு சேர்த்த பணம் கையுட்டு போச்சோன்னு பயந்தேன், காப்பாத்தி கொடுத்திட்ட மாரியாத்தா," என மனத்தில் வேண்டிக்கொண்டான்.
அந்த கலவரத்திலும் மொபைலை நோண்டிகொண்டிருந்த பாஸ்கரை எரிச்சலாக பார்த்தான் நடராசு.
திடீரென நிமிர்ந்த பாஸ்கர், "ராசு ராசு, சாரி டா, சாரி சாரி. இப்பதாண்டா ஒன்ன கண்டுபிடிச்சேன். தேதிய மாத்தி போட்டோ எடுத்தா மாத்துன தேதிதான் அதுல இருக்கு. அதேபோல கம்ப்யூட்டர வெச்சும் தேதிய மாத்தலாம்கிறது இப்பதான் ஞாபகம் வருது. சாரிடா."
"அஆம்டா. இப்ப வந்து இத சொல்லு. அப்ப எங்க போன நீ. நீயே என்ன சந்தேக பட்டுடியே. தலைவர் வரலேன்ன என்னாகி இருக்கும்."
"இல்லடா. ஒரு பொடியன் ஒருத்தன் வீல சுத்தீட்டு இருந்தான்னு சொன்னியே அப்பவே மனசுல ஒரு நெருடல் இருந்துச்சு. ஆனா குழப்பத்துல அத கவனிக்கல. அது சரி நான்தா மொபைல பாத்து இத கண்டு பிடிச்சேன். ஆனா தலைவர் எப்படி உடனடியா கண்டுபிடிச்சார்."
பாஸ்கர், "தலைவரே...." என்று அவரை அழைத்தான்.
"என்ன கண்ணு. நான் எப்படி கண்டுபிடிச்சேன்னு பாக்குறியா?அதொண்ணு பெரிய விசயமில்ல, உங்களுக்கே தெரியு.... சுத்துவட்டார இருபத்தஞ்சு கிலோமீட்டருக்கும் நாந்தான் பூ சப்ளைன்னு. கடந்த பத்து நாளா செவ்வந்திப்பூ சப்ளையே இல்ல. ஏன் கோயமுத்தூரு பூமார்கட்லையே வரத்து இல்ல. ரெண்டு வாரமாச்சு ஒத்த செவ்வந்திப்பூவ கண்ணுல பாத்து."
பாஸ்கர் நடராசுவின் காதை கடித்தான், "என்னடா இவ்வளவு நேரமா நல்லத்தான இருந்தாரு."
"ஏங்கண்ணு பாஸ்கரு, அவங்கிட்ட கேக்கிறதுக்கு எங்கிட்டவே நேரடியா கேளு. இவ்வளவு நேரம் நல்லாதான பேசிட்டு இருந்தான், இப்ப என்ன திடீர்ன்னு லூசாகிட்டானான்னு தான கேட்ட," என்று சிரித்தார் சாமிக்கண்ணு.
முழித்தான் பாஸ்கர். "இல்லீங் தலைவரே, அப்புடி இல்லைங்...."
"அத உடு கண்ணு. அவன் காமிச்ச போட்டோவில இருந்த வண்டிக்கு போட்டிருந்த மாலை செவ்வந்திப்பூ மாலை. நம்ம ராசு வண்டில போட்டுருகிறது சம்பங்கிபூ மாலை. அம்புட்டுத்தான்."
Comments
Post a Comment